இங்கே நிம்மதி-1
1.கடவுளை நம்பாதே
எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி... என்று நிம்மதியைத் தேடித் தேடித் தேய்ந்து போனவர்களுக்காக, உண்மையான நிம்மதி எங்கே இருக்கின்றது என்பதை இனம் காட்டும் வண்ணம் ஒரு
கட்டுரைத் தொடரை நீ எழுத வேண்டும் என்று சிட்னியில்...இருக்கும் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னைக் கேட்பதுண்டு.
எப்போது நான் நிம்மதியுடன் இருப்பதாக நம்புகிறேனோ அப்போது அதை எழுதுகிறேனே....என்றேன் .
நண்பர் விடவில்லை.
'பணம் உள்ளவனை விட பணம் இல்லாதவனால் தான் பணத்தின் அருமை பற்றி பக்கம் பக்கமாக பேச முடியும்.
நிம்மதி உள்ளவனை விட...நிம்மதியைத் தேடிக் கொண்டிருப்பவனால் தான் நிம்மதி பற்றி இறங்கி வந்து நடைமுறைத் தெளிவுடன் பேச முடியும்.இந்த ஒரு தகுதியே உனக்குப் போதும் உடனே
எழுது' என்றார்.
அவர் என்னை உலுக்கிய உலுக்கலில்,எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த சில வைரங்கள் வெளியே விழுந்தன.
நிமிர்ந்தேன்.
அதை விட அதிகமாக குப்பைகளும் விழுந்தன.
குனிந்தேன்!
கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆராய்ச்சி இங்கே அவசியமற்றது.
ஆனால், கடவுளை நம்பினால் நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் அர்த்தமற்றது.
கண்ணுக்குத் தெரிகின்ற உன் உறவுகளும், நண்பர்களும்,சமூகமும் தராத நிம்மதியை
கண்ணுக்குத் தெரியாத ஒன்று உனக்கு தரும் என்று நீ நம்புகிறாய்.
கடைசிவரை நம்பிக்கொண்டே நாட்களை நகர்த்துகின்றாய். ஆனாலும், வ்ழிக்கு வழி எங்கே நிம்மதி ...எங்கே நிம்மதி...என்றும் ஏங்குகிறாய்.
நீ நம்பிய கடவுள் ஏன் அந்த நிம்மதியை உனக்குத் தரவில்லை?
எங்கே கோளாறு?
எப்போதாவது ஆற அமர்ந்து உட்கார்ந்து உனக்குள் அலசியிருக்கிறாயா?
நிம்மதி என்றால் சந்தோஷம் என்றும், பிரச்சனைகள் இல்லாத நிலை என்றும்,சுகம்,சொகுசு என்றும் நீ நினைத்திருப்பாய்.
கடவுள்மீது நம்பிக்கை வைத்தால்...இவை எல்லாமே உனக்குக் கிடைக்கும் என் எதிர்பார்த்தாய்....எதிர்பார்க்கிறாய்.
இப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை என்பது உனக்குள் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச
நிம்மதியையும் உனக்கே தெரியாமல் ஒழித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர உனக்கு வாய்ப்பில்லை.
காரணம்...நீ போர்த்திக் கொண்ட போர்வை அத்தகையது.
நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டவனுக்கு உறக்கத்தைத் தவிர வேறென்ன வரும்?
கடவுள் நம்பிக்கை என்ற போர்வையில் நீ நடமாடிக்கொண்டே உறங்கி வழிகிறாய்.
கால அள்வு தாண்டி உறங்குபவனுக்கு என்ன வரும்? கனவுகள் தான் வரும்!
அந்த கனவுகள் என்ற கடலிலே உன் உழைப்பாற்றலும், நேரமும், திறமைகளும் 'டைட்டானிக்' ஆகிக் கொண்டிருப்பதை நீ அறிய நியாயமில்லை.
ஒரு பொழுது போனால் போதை மயக்கம் போய் விடும்.
ஆனால் கடவுள் மயக்கம் கடைசிவரைக்கும் ஒரு வட்டத்துக்குள்ளேயே உன்னை மடித்துப் போட்டு விடுகிறது.
போகப் போக கடவுள் என்ற கற்பனை உனக்குப் பல சௌகரியங்களை செய்து தந்து உன்னை முன்னேற விடாமல் தடுக்கின்றது.
அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை உன் முயற்சிகளை சுருக்குகிறது. சோம்பலைப் பெருக்குகிறது.
உன் கணக்கில் வந்திருக்க வேண்டிய வசந்தங்களை வழி தவற வைக்கிறது.
கெட்டபின்பு அந்தப் பழியையும் சர்வ சாதாரணமாக கடவுள்மீது தூக்கிப் போட்டு விடுகிறாய்.
கடவுளுக்குக் க்ண்ணில்லையென்றும், கல் மனமென்றும் அவரை உனது தராதரத்துக்கு இறக்கி வந்து இழித்துப் பேசுகின்றாய்.
உனது இயலாமைகளையும்,சோம்பலையும் மூடி மறைக்க மறுபடியும் ஒரு போர்வையைத் தேடுகிறாய்.
'பழைய குருடி கதவைத் திறவடி' என்பது போல மீண்டும் பழைய இருட்டுக்குள் போய் உன்னைப் பரப்பிக் கொள்ளுகிறாய்.
உனது ஒவ்வொரு சறுக்கலுக்கும் நீ மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்.
சறுக்கல்களுக்கு கடவுளை சார்ந்தே சமாதானங்களைக் கண்டு பிடித்துச் சொல்லுகின்றாய்.
உனது தோல்விகளுக்குப் பின்னணியில் கடவுள் இருப்பதாகவும்,உன்னைப் பக்குவப்படுத்தவே அவர் அந்தத் தோல்விகளைத் தருவதாகவும்,காலப்போக்கில் அவர் உன்னை வெற்றிப் பாதைக்கு
அழைத்துச் செல்வார் என்றும் சமாளிக்கப் பார்க்கின்றாய்.
பகல் கனவிலே பல வருடங்களை செலவு வைத்தாய்.
அந்த விரயங்களுக்கும் கூட அவர் நஷ்ட ஈடு தருவார் இரட்டிப்பாக என்று வியாக்கியானம் செய்கிறாய்.
எப்போதாவது அரிதாக ராஜ பல்லாக்குக் கிடைத்தாலும், அதிலும் உறங்கிக் கொண்டு பயணிக்கவே ஆசைப்படுகிறாய்.
உன் உழைப்பாற்றலைச் சுற்றி சோம்பல் புதர்கள் வளர்ந்து நிற்கின்றன.
இருட்டுக்குள்ளேயே உனது உலகம் இயங்கிக் கொண்டிருப்பதால் ஒளித் தொகுப்பு இல்லாமல் உன் திறமைகள் ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் உனது கடவுள் நம்பிக்கை தானே?
அதனால் தான் கடவுளை நம்பாதே என்றேன்.
உனது வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கடவுளுக்கு நீ கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதில் கொண்டதால் தான், இந்த தொடரின் முதல் அத்தியாயத்தை நானும் கடவுள்
முக்கியத்துவத்துடன் ஆரம்பித்தேன்.
முன்னுக்கு வர நினைப்பவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது முத்லிலிருந்து கடைசி வரைக்கும் முட்டுக்கட்டையே என்ற எனது கருத்தில் மறு பரிசீலனைக்கு இடமில்லை.
அதனால் தான் கடவுளை நம்பாதே என்று உறுதியாக உனக்குச் சொன்னேன்.
அப்படியானால் கடவுள் என்ற சிந்தனையே தேவையற்றது என்கிறாயா ? என்று நீ என்னைக் கேட்கலாம்.
இங்கே நிம்மதி-2
கடவுள் தேவையா ?'இங்கே நிம்மதி' கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயத்தில் 'கடவுளை நம்பாதே' என்றேன்.
அப்படியானால்....கடவுள் தேவையில்லையா? என்று நீ கேட்கலாம்.
அது உனது மனப் பக்குவத்தைப் பொறுத்தது.
நீ வாழுகின்ற சூழலைப் பொறுத்தது.
உனது மன வலிமையைப் பொறுத்தது.
உனது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்ற மருந்து உன்னிடமே இருக்கின்றது என்று நீ நம்பினால்...கடவுள் தேவையில்லை.
என்ன தான் தலைகீழாக நின்றாலும் நடப்பது நடந்தே தீரும் என்கின்ற 'தெளிவு' உன்னிடம் இருந்தால்...அங்கேயும் கடவுள் தேவையில்லை.
பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் முயற்சிக்கு மட்டுமல்ல, நேரத்துக்கும் முக்கிய பங்கிருக்கின்றது என்று நீ நம்பினால்...அங்கேயும் கடவுள் தேவையில்லை.
'நல்ல நேரம்' என்பதை கடவுளால் உருவாக்கித் தர முடியாது.
அது தானாக வர வேண்டும்.
'நல்ல நேரம்' என்று சொல்வது மூட நம்பிக்கை அல்ல.
அதை 'நல்ல சூழல்' என்ற அர்த்தத்திலேயே நான் அடையாளம் காணுகிறேன்.
அந்த சூழல் தானாக உருவாகும்.
எப்போது என்று சொல்வது கடினம்... முன்பின் ஆகலாம்.
இன்று சுழலாக இருக்கும் சூழல்...நாளை தென்றலாகலாம்.
இன்று சோலையாக இருக்கும் சூழல் நாளை பாலையாகலாம்.
இது உனது கையில் இல்லை.
தகுந்த மனோ பலமும், தேர்ச்சியும் உன்னிடம் இருந்தால்....சுழலில் சிக்கினாலும் முத்தெடுத்துக் கொண்டு திரும்பி வருவாய்.
பாலைவனத்தைத் தந்தாலும் அங்கே பயிர் செய்யும் விஞ்ஞானத்தைக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கும் கற்றுத் தருவாய்.
உன்னை மையமாக வைத்தே விளைவுகள்.
வாழ்க்கையின் வளைவுகள்.
அனைத்துக்கும் நீ அதிபதி.
ஆதியும் நீ.... அந்தமும் நீயே...
உன் ஒவ்வொரு சாதனைகளுக்கும், சரிவுகளுக்கும் சொந்தமும் நீயே !
எந்த ஒரு சுகமோ துக்கமோ கடவுளால் உனக்குத் தரப்படுவதில்லை.
எல்லாமே நீ வாங்கி வந்தது...வாங்கிக் கொண்டிருப்பது....வாங்கப் போவது!
உனது கணக்கில் எதை நீ சேமிக்கிறாயோ அதுவே வட்டியும் முதலுமாக உன் கைகளை நிறைக்கின்றது...அல்லது கைகளைக் கட்டி விடுகின்றது!
பொன்னைத் தான் சேமித்தேன்... மிஞ்சியதோ மண்தான் என்று பெருமூச்சு விடுகிறாயா?
அந்தப் பொன்னை எப்படி சேமித்தாய் என்று சிந்தித்துப் பார்.
மண்ணுக்கான காரணம் கண்டு கொள்வாய்.
நினைவு தெரிந்த நாள்முதல் நேர் வழியில் தான் பயணம் செய்கிறேன்...ஆனாலும் என் பாதையில் தான் நெருஞ்சி முட்கள் நிறைந்திருக்கின்றன.
எங்கே கோளாறு? என்று ஏங்குகிறாய்.
ஏங்காதே...சத்தியப் பாதையிலே இது சகஜம்.
ஏன்?... எதற்காக?... என்று கேட்காதே.
காரணங்களைக் கற்பனை செய்ய வேண்டி வரும். உனது நேரமும் எனது நேரமும் விரயமாகும்.
எதையும் அதுவாக ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்.
எல்லாம் நல்லதுக்கே என்று இளகிக் கொள்.
சத்தியமும், நேர்மையும் சாய்ந்ததாக சரித்திரம் இல்லை.
உனக்குத் தெரியாத அல்லது உன்னால் விளங்கிக் கொள்ள முடியாத சில காரணங்களால் உனது பாதையில் ' சத்திய சோதனை' தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும்...அதை நீ சோதிக்காதே.....அது உன்னை சோதிக்க அனுமதி.
ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையையும் எரிக்கும் 'சோதி' நீ என்பதை அதற்கு உணர்த்து.
பாரதியின் கம்பீரத்துடன் உனது பாதங்களை இன்னும் உத்வேகத்துடன் பூமியில் அழுத்தமாகப் பதித்து நட.
விழுந்தாலும் வெட்கப்படாமல், நேர்வழியில் தானே விழுந்தேன் என்று முட்களையும், சகதிகளையும் தட்டிக்கொண்டே தடம் மாறாமல் நட.
சத்தியத்தை சந்தேகிக்காதே.
இந்த உலகில் நித்தியமானது சத்தியம் ஒன்று தான்.
அதுவே நிம்மதியின் சூட்சுமம்.
அன்பு...பண்பு...கருணை...இரக்கம்... தொண்டு....என்று சத்தியத்திற்குத்தான் எத்தனை எத்தனை குழந்தைகள் !
அந்தக் குழந்தைகளில் நீயும் ஒரு குழந்தை என்று அமைதி பெறு. ஆறுதல் கூறு.
சமூகம் மதிக்காத ஒரு சூழலில் நீ வாழ்ந்தாலும் கூட, உன்னுள்ளே 'சுத்தம்' என்று நீ நம்பினால் எந்த சூழலாலும் உன்னை அசுத்தப்படுத்த இயலாது.
சேற்றிலும் செந்தாமரை கறை படாது நிற்கிறது.
அசுத்த நீரில் நின்று கொண்டிருந்தாலும்... அதன் வசீகரமும்,தனித்துவமும் அதனால் கலைந்து போவதில்லை... கரைந்து போவதில்லை.
அது போலவே உன்னையும் ஆற்றிக் கொள்.... உற்சாகத்தை ஊற்றிக் கொள்.
சூழல்கள் உன்னை சிக்க வைக்கப் பார்க்கும்...போராடு.
எதிலுமே உன்னைப் பந்தப்படுத்திக் கொள்ளாதே.
சத்தியப் பார்வையுடன் தனது கடமைகளை மட்டும் ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டிருப்பவனுக்கு...அல்லது நிறைவேற்ற முயல்பவனுக்கு 'நோயெதிர்ப்பு சக்தி' அதிகம்.
சமூகத்தின் எந்த ஒரு நச்சுக் கிருமியாலும் அவன் ஆரோக்கியத்தை அபகரிக்க முடியாது.
'கடவுள்' என்ற சிந்தனையே இல்லாமல் பல சிகரங்களை அவனால் கடக்க முடிகிறது.
புதிய வரலாறுகளை அவனால் தொடக்க முடிகிறது.
எனது கடவுள்....
ஆச்சரியமாக இருக்கும் உனக்கு!
ஆனாலும்....ஒரு உண்மையைச் சொல்லுகிறேன்.
பலருக்கும் ஒரு கடவுள் இருப்பதைப் போல.....அல்லது பலரும் ஒரு கடவுளை வைத்திருப்பதைப் போல...நானும் ஒரு கடவுளை வைத்திருக்கிறேன்.
எனது கடவுள் தன்னைத் துதி பாடுவதை விரும்புவதில்லை.
அதை...ஊக்குவிப்பதுமில்லை.
வெறுப்பின் உச்சத்தில் அவரை நான் திட்டும் போதெல்லாம்....' எள் ' அளவுக்குக் கூட என்னை அவர் வெறுத்தது இல்லை.
அதற்காக என்னைத் தண்டிக்க நினைத்ததுவுமில்லை.
அளவுக்கு அதிகமாக அவரை நான் போற்றினாலும்...எனக்கு என்ன 'அளவு'... எது எது வந்து சேர வேண்டுமோ...அதை அதை அப்படியே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறார்.
அதில் நல்லதும் இருக்கலாம். கெட்டதும் இருக்கலாம்.
அதே போல... அளவுக்கு அதிகமாக அவரை நான் தூற்றினாலும்...எனக்குக் கிடைக்க வேண்டிய பொக்கிஷங்களை ஒரு போதும் அவர் பூட்டி வைத்ததில்லை.
தண்டனை நோக்கில் என் துன்பச் சுமைகளை அவர் அதிகமாக்கியதில்லை.
24 மணி நேரமும் அவர் பார்வை என் மீது பதிந்து கொண்டிருக்கின்றது.
நான் 'பலம்' என நினைத்துக் கொண்டிருக்கின்ற எனது பலவீனங்கள்...நான் பலவீனம் என நினைத்து கொண்டிருக்கின்ற எனது பலம்....அனைத்தையும் அவன் அறிவான்.
எனக்குள் இருக்கும் ஞானி....புத்திசாலி....கர்மயோகி ஆகியோரை மட்டுமல்ல, எனக்குள் மறைந்திருக்கும் முட்டாள், பச்சோந்தி,கோழை,ஏழை...யாவரையும் அவன் நன்கறிவான்.
நான் அழுதாலும்..தொழுதாலும் அவன் தனது கணக்கை மாற்றிப் போட்டதில்லை.
நேர்த்திக் கடன்களினால் அவனை உருக வைக்க முடியாது.
படையல்களினால் அவனைப் படிய வைக்க முடியாது.
நேர்த்திகளில் சிக்கி தனது கீர்த்தியை அவன் குறைத்துக் கொள்வதில்லை.
கதறி அழுதாலும்....கடும் விரதம் இருந்தாலும்....அவனை உதறி எறிந்தாலும்...எனக்குக் கிடைக்க வேண்டியது எதுவோ அதை மட்டுமே எனக்குக் கிடைக்க வைக்கிறான்.
மற்றவற்றை மறைத்து வைக்கிறான்.
நேர்த்திக் கடன்களைப் பார்த்து அவன் சமாதானம் ஆவதில்லை.
மலிவான நேர்த்திகளில் மயங்கி...தனது கீர்த்திகளை கீழிறக்க அவன் சம்மதிப்பதில்லை.
போற்றிப் பாடி குளிர்வித்தால், உருகுவதற்கும்....தூற்றினால்,துன்புறுத்துவதற்கும் அவன் ஒன்றும் மானிடன் அல்லவே!
எனது பிரார்த்தனைகளைத் தவிர, எனது மற்றைய அத்தனை செயல்களையும் அவன் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
எனது செயல்களால் விளயும் நன்மை தீமைகளை அவன் அறிவான்.
ஆனாலும் அந்த நன்மை தீமைகளை வைத்து எனது நன்னடத்தைக்கு அவன் புள்ளிகளை வழங்குவதில்லை.
எனது செயல்களினால் வரும் விளைவுகளை மட்டுமன்றி....அந்த செயல்களை நான் செய்து கொண்டிருப்பதற்கான காரணம்,சந்தர்ப்பம்,சூழல்...ஆகியவற்றையும் அவன் கூர்மையாக ஆராய்கிறான்.
எனது சூழலையும்,எனது செயல்களின் நோக்கங்களையும் ஆராய்ந்து எனது தவறான செயலுக்குக் கூட அவன் பொது மன்னிப்பு வழங்கியதுண்டு.
தயவு தாட்சண்யமின்றி தண்டனைகளும் தந்ததுண்டு.
எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
ஆனாலும் அவனிடம் ஒரு 'ஒழுங்கு' இருக்கின்றது.
மாணவர்களுக்கு 'அளவையியல்' என்ற பாடத்தை நான் போதித்த போது...அதில் 'வரைவிலக்கணம்' என்று ஒரு பாடப் பிரிவு வரும்.
வரைவிலக்கணம் என்றால் என்ன? என்ற மாணவர்களின் கேள்விகளுக்கு நான் பதில் தந்திருக்கிறேன்.
ஆனால் ஆண்டவனின் வரைவிலக்கணம் என்ன? என்ற எனது கேள்விக்கு, உலகத்தில் தோன்றி மறைந்த எந்த ஒரு மகானாலும் இன்றுவரை எனக்குத் தெளிவான பதிலைத் தர முடியவில்லை.
ஆனாலும்...அவனுக்கு வரைவிலக்கணம் உண்டு...அது அவனுக்கு மட்டுமே தெரியும்.
அவனும் சில சமயங்களில் என்னைப் போலவே இலக்கணங்களை மீறியும் இயங்குவதுண்டு.
'விழுந்து எழுந்து நட' என்று தான் பல சமயங்களில் அவன் எனக்குப் போதிக்கிறான்.
எனக்கு அவனைப் பிடிக்கிறதோ இல்லையோ....என்னை அவன் பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றான்.
பிடிப்பது நான் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக என்கிறான்.
நான் எழுந்து விடாமல் இருப்பதற்காகவும் அவன் என்னைப் பிடித்து அழுத்துவதுண்டு.
நிழலாகவும் என்னைத் தொடருகிறான்.
வெயிலாகவும் என்னை விரட்டுகிறான்.
என்னைத் தனியே விடு...தெளிய விடு என்றால்...என் பாதையிலே குறுக்கிட்டு குழப்பம் கூட்டுகிறான்.
குழப்பத்தில் இருந்து தெளிவுக்கு வா என்கிறான்.
அல்லது தெளிவில் இருந்து குழப்பத்திற்குப் போ என்கிறான்.
இந்த இரண்டுக்கும் மாறி மாறிப் போய் வருவது தான் வாழ்க்கை என்கிறான்.
இப்போது தான் 'நீலி பிருங்காதி' எண்ணெய் தடவ ஆரம்பித்திருக்கிறேன்.வேறு சப்ஜெக்ட் பேசலாமே...என்றேன் அவசரமாக..
எதுவானாலும் கேள் என்றான்.
எங்கே நிம்மதி? என்றேன்.
'பொன்னைத் தேடு..பொருளைத் தேடு..புகழைத் தேடு...ஆனால், நிம்மதியை மட்டும் தேடாதே.'
'ஏன்?'
'அது தேடிக் கிடைக்கும் பொருள் அல்ல.'
'பின்னே..எப்படிக் கிடைக்கும்?'
'எதையும் அதுவாக ஏற்றுக் கொள்....எதிலிருந்தும் தப்பிக்க நினைக்காதே....அது தான் நிஜமான நிம்மதி.'
'ஆனால் எனக்குத் தேவைப்படுவது பூரண நிம்மதி சுவாமி'
'உன்னை உணர்வது நிம்மதியின் முதல் படி.
உனது சூழலை உணர்வது...நிம்மதியின் இரண்டாவது படி.
உனது கடமைகளை நிறைவேற்றப் போராடுவது...நிம்மதியின் மூன்றாவது படி.
இந்த மூன்று படிகளையும் நீ தாண்டும்போது பரி பூரண நிம்மதியின் பரம சன்னிதானம் உனக்காகத் திறக்கப்படும்'
'இவ்வளவு தானா சுவாமி!...இதைத் தான் நான் இத்தனை காலமும் செய்து கொண்டிருக்கிறேன்.ஆனாலும், நிம்மதி இல்லையே?'
'நீ நிம்மதி என்று நினைத்துக் கொண்டிருப்பது சந்தோஷம்....உல்லாசம்....சொகுசு....சோம்பல்...ஆனால்,உண்மையான நிம்மதி அதுவல்ல.'
'பின்....எது சுவாமி?'
'இயக்கம்....இயக்கம்...இடை விடாத இயக்கம்..
உனது கடமைகளை நிறைவேற்ற இயங்கு...உனது கடமைகளை நிறைவேற்றப் போராடு..
இந்த இயக்கமும்,போராட்டமும் தான் நிஜமான நிம்மதி.
உனது கடமைகளுக்காக உழைப்பதும் தேய்வதும்,ஜெயிப்பதும் தோற்பதும்,விழுவதும் எழுவதும் தான் நிஜமான நிம்மதி' என்றார் கடவுள்.
சரி..உனது கடவுளின் பெயர் என்ன?
சிவனா? விஷ்ணுவா? பிள்ளையாரா? முருகனா? வைரவரா? அம்மனா? என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது.
எனது கடவுளுக்கு உருவம் இல்லை.கோவிலும் இல்லை.
மதம் இல்லை.ஆண் பெண் என்ற பால் பேதமும் இல்லை.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.
அவர் பெயர்.....'சத்தியம்'.
tamil la eruku ok gud. but vasikura alavu porumai illa. enum koncham chinatha one or two lines the blog create panuna bettera erukum athuku apuram command adikurain ok va
ReplyDelete.
nice one - a theory to say a coin has 2 sides..! i liked the last part about - sathiyam..! keep it going..!
ReplyDelete